கார் நிறுவனங்களுக்கு மைலேஜ் செக் வைக்கும் மத்திய அரசு! அறிமுகமாகிறது புதிய CAFE 3 விதிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கார்களின் எரிபொருள் செயல்திறனை (மைலேஜ்) கணிசமாக உயர்த்தவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய கேஃபே 3 (CAFE-III) வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இந்த புதிய விதிமுறைகளைத் தயாரித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் 2027-28 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டார்கெட்
டார்கெட் மற்றும் புதிய சோதனை முறைகள்
புதிய வரைவு அறிக்கையின்படி, கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வாகனங்களின் சராசரி கார்பன் உமிழ்வு இலக்கு ஒரு கிலோமீட்டருக்கு 91.7 கிராம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்பொழுது ஆய்வகங்களில் நடத்தப்படும் பழைய எம்ஐடிசி (MIDC) சோதனை முறைக்கு மாற்றாக, கார்களின் உண்மையான சாலைப் பயன்பாட்டு மைலேஜை துல்லியமாகக் கணக்கிடும் சர்வதேச அளவிலான டபிள்யூஎல்டிபி (WLTP) சோதனை முறைக்கு மாறவும் இந்த வரைவு முன்மொழிந்துள்ளது.
எலக்ட்ரிக் கார்கள்
ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான சலுகைகள்
கார் நிறுவனங்கள் தங்களது கார்பன் உமிழ்வு இலக்கைச் சரிசெய்வதற்காக, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வாகனங்களுக்கு "சூப்பர் கிரெடிட்ஸ்" (Super Credits) எனும் கூடுதல் புள்ளிகள் வழங்கும் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு 5 புள்ளிகளும், பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 4 புள்ளிகளும் பெருக்கல் காரணியாக (Multiplier) வழங்கப்படும்.
அதேநேரம், ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கான சலுகைப் புள்ளிகள் தற்போதைய கேஃபே 2 விதிகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைக்கப்பட்டுள்ளது.
எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான தனித்துவமான புள்ளிகள் குறித்தான ஆய்வு தற்பொழுது பரிசீலனையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்களுக்கு இதனால் என்ன பயன்?
இந்த புதிய வரைவு விதிகள் கார் வாங்குபவர்கள் மீது நேரடியாக எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
இருப்பினும், இந்த கடுமையான உமிழ்வு இலக்குகளை எட்ட கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற மைலேஜை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை சாதாரண பெட்ரோல், டீசல் கார்களிலும் கட்டாயமாக வழங்க நேரிடும்.
மேலும், வரும் ஆண்டுகளில் சந்தையில் கூடுதல் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகமாவதற்கும் இது வழிவகுக்கும்.
விலை உயர்வு
விலை உயர்வு அபாயம் உள்ளதா?
இந்த புதிய விதிகளின் காரணமாக உடனடியாகக் கார்களின் விலை உயராது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வரைவு அறிக்கை குறித்துப் பொதுமக்கள் மற்றும் வாகனத் துறையினரின் கருத்துக்களைப் பெற்ற பிறகே இறுதி விதிகள் உருவாக்கப்படும்.
கார் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்ப மாற்றங்களுக்கான செலவை எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் கார்களின் விலை நிலவரம் அமையும்.