BYD நிறுவனத்தின் இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) தொடக்கம்; முன்பதிவு செய்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர்
பைட் (BYD) தனது புதிய மின்சார வாகனமான இமேக்ஸ் 7 எம்பிவிக்கான முன்பதிவுகளை இந்தியாவில் நாளை முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இமேக்ஸ் 7 என்பது தற்போதுள்ள இ6 மாடலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த வாகனத்தை முன்பதிவு செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ₹51,000 வரை மதிப்புள்ள பலன்கள் மற்றும் தள்ளுபடிகளை நிறுவனம் வழங்குகிறது. நிதிச் சலுகைகளுடன் கூடுதலாக, இமேக்ஸ் 7 ஐ முன்பதிவு செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு பைட் இந்தியா இலவச 7கிலோவாட் மற்றும் 3கிலோவாட் சார்ஜர்களையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. முன்பதிவுகளை அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் செய்துவிட்டு, 2025 மே 25 அல்லது அதற்குமுன் தங்கள் வாகனத்தை டெலிவரி எடுக்க வேண்டும்.
வடிவமைப்பு மாற்றம் குறித்த தகவல்கள்
முன்பதிவு தொகை ₹51,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த இமேக்ஸ் 7 அதன் முன்னோடியான இ6 மாடல் காரிலிருந்து பல வடிவமைப்பு மாற்றங்களை பெற்றுள்ளது. இதில் ஸ்லீக்கர் ஹெட்லேம்ப்கள், மெலிதான மூடிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் புதிய பம்ப்பர்கள் ஆகியவை அடங்கும். பக்கவாட்டு புரஃபைல் பழைய இ6 மாடலில் உள்ளதுபோல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் மூன்றாவது வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் இருக்கைகளாகும். இதற்கிடையே, இமேக்ஸ் 7 ஆனது பழைய இ6 இல் உள்ள பவர்டிரெய்னைத் தக்கவைக்குமா அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒன்றைக் கொண்டிருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.