Loading...
இந்தியாவில் லாபம் ஈட்டிய முதல் இ-ஸ்கூட்டர் நிறுவனம்: ஏதர் எனர்ஜி சாதனை
இந்தியாவில் லாபம் ஈட்டிய முதல் இ-ஸ்கூட்டர் நிறுவனமானது ஏதர் எனர்ஜி

இந்தியாவில் லாபம் ஈட்டிய முதல் இ-ஸ்கூட்டர் நிறுவனம்: ஏதர் எனர்ஜி சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2026
07:15 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏதர் எனர்ஜி நிறுவனம், இந்திய மின்சார இரு சக்கர வாகன வரலாற்றிலேயே முதல் முறையாக காலாண்டு நிகர லாபத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனம் ₹1.26 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ₹154 கோடி நஷ்டத்தை சந்தித்திருந்த நிலையில், தற்பொழுது இமாலய வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 63 சதவீதம் உயர்ந்து ₹1,526 கோடியை எட்டியுள்ளது.

விற்பனை உயர்வு

விற்பனை உயர்வு மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை முந்திய சாதனை

முதல் காலாண்டில் ஏதர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை 42 சதவீதம் அதிகரித்து 93,211 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

சராசரி மாதாந்திர விநியோகம் 28,000-ல் இருந்து 33,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய வலுவான நிதிநிலை முடிவுகள் மற்றும் தொடர் விற்பனை வளர்ச்சி காரணமாக, தனது போட்டியாளரான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஏதர் எனர்ஜி முதன்மை இடத்திற்கு முன்னேறியுள்ளது.

450 சீரிஸ், ரிஸ்டா மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கோனார்க் ஆகிய மாடல்களின் அதிக தேவைகளே இந்த விற்பனை உயர்விற்கு முதன்மை காரணமாக அமைந்தது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம் மற்றும் தலைமை நிர்வாகியின் கருத்து

காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தேசிய பங்குச் சந்தையில் ஏதர் எனர்ஜியின் பங்கு விலை ஒரே நாளில் 14.1 சதவீதம் வரை உயர்ந்து ₹1,575 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

2025 மே மாதத்தில் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட்டதில் இருந்து இதன் பங்கு மதிப்பு 5.25 மடங்கு உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா பேசுகையில், "லாபம் ஈட்டியிருந்தாலும் நாம் இன்னும் முழுமையான இலக்கை அடையவில்லை.

விற்பனை அளவையும் வருவாயையும் உயர்த்துவதிலேயே எங்களின் முதன்மைக் கவனம் இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உற்பத்தி விரிவாக்கம்

உற்பத்தித் திறன் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

நாட்டில் அதிகரித்து வரும் மின்சார வாகனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஏதர் நிறுவனம் தனது ஆண்டு உற்பத்தித் திறனை 10 லட்சத்திற்கும் மேல் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காகத் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள ஆலையின் உற்பத்தித் திறன் 4.95 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மேலும் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆலையின் திறன் 6.5 லட்சமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் தாமிரம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு சவாலாக இருந்தாலும், திறமையான நிர்வாகத்தால் வளர்ச்சியைத் தக்கவைக்க முடிவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT