
மஹிந்திரா 3-டோர் தார் புதிய அம்சங்களுடன் அறிமுகம்: விலை ₹9.99 லட்சத்தில் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான ஆஃப்-ரோடர் வாகனமான தார் 3-டோர் மாடலை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மாடலின் விலை ₹9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இல் தொடங்குகிறது. வெளிப்புறத் தோற்றம் பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், உட்புறத்தில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்புற மாற்றங்களில், பாடி நிறத்திலேயே அமைந்த ரேடியேட்டர் கிரில், இரட்டை-தொனியை (Dual-tone) அளிக்கும் பம்பர் சில்வர் டிரிம்கள் ஆகியவை அடங்கும். மேலும், வசதிக்காக பின்புற பார்க்கிங் கேமரா, பின்புற வாஷர் & வைப்பர் மற்றும் ஓட்டுநர் இருக்கையிலிருந்து திறக்கும் எரிபொருள் தொட்டி மூடி ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
மேம்படுத்தப்பட்ட மாடலின் புதிய அம்சங்கள்
டாங்கோ ரெட் மற்றும் பேட்டில்ஷிப் கிரே என இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில், பயணிகள் எளிதாக ஏறவும் இறங்கவும் தூண்கள் மீது பொருத்தப்பட்ட புதிய கிராப் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவர் விண்டோ சுவிட்சுகள் இப்போது கதவு பேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய மாடலான தார் ராக்ஸ்ஸில் இருந்து பெறப்பட்ட முக்கியமான அம்சங்களாக 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் (ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன்), ஸ்லைடிங் வசதி கொண்ட முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை உள்ளன. புதிய திரையில் ஆஃப்-ரோடிங் தகவல்களான சாய்வு கோணம் போன்றவற்றை காட்டும் அட்வென்ச்சர் ஸ்டேட்ஸ் தொகுப்பும் உள்ளது. என்ஜின் அம்சம் பழைய மாடலில் இருந்தபடியே உள்ளது.