பேச முடியாத மகனுக்காக கையில் கீபோர்டு டாட்டூ! சார்ஜ் தீராத தாயின் அன்பு; இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பிளெட்சர் என்ற தாய், தனது 11 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனான ஹண்டருடன் உரையாடுவதற்காகத் தனது கையில் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய கீபோர்டு டாட்டூவை வரைந்து கொண்டுள்ளார். ஹண்டரால் சாதாரணமாகப் பேச முடியாது என்பதால், அவர் 'AAC Device' என்ற மாற்றுத் தகவல் தொடர்பு டேப்லெட் மூலமே தனது தேவைகளைத் தெரிவித்து வந்தார். இந்த சூழலில் தாய் எடுத்த இந்த முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய யோசனை
டேப்லெட் சார்ஜ் தீர்ந்ததால் பிறந்த புதிய யோசனை
ஒரு நாள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஹண்டரின் தகவல் தொடர்பு சாதனத்தின் பேட்டரி சார்ஜ் முழுமையாகத் தீர்ந்துவிட்டது.
இதனால் பதற்றமடையாத சிறுவன் ஹண்டர், அங்கிருந்த ஒரு பேப்பர் நேப்கினில் கீபோர்டு வடிவை வரைந்து, அதில் உள்ள எழுத்துக்களைத் தொட்டுக் காட்டி தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்தான்.
இதைப் பார்த்த ஜெசிகா, தனது மகனுக்கு பேட்டரி சார்ஜ் தீராத, எப்போதும் உடன் இருக்கும் ஒரு மாற்றுத் தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார்.
டாட்டூ
கையில் டாட்டூ மற்றும் மகனின் முதல் வார்த்தை
இதையடுத்து டாட்டூ கலைஞரின் உதவியுடன் ஜெசிகா தனது கையில் ஆங்கில எழுத்துக்கள், மகிழ்ச்சி மற்றும் சோகம் உணர்வை உணர்த்தும் குறியீடுகள் மற்றும் ஐ லவ் யூ பட்டன் அடங்கிய கீபோர்டு டாட்டூவை வரைந்து கொண்டார்.
தனது தாயின் கையில் இருந்த டாட்டூவைக் கண்ட சிறுவன் ஹண்டர், அதில் முதல் வார்த்தையாக "M-A-M-A" (அம்மா) என்று தட்டச்சு செய்து தனது அன்பை வெளிப்படுத்தினான்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் தாயை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியது.
வரவேற்பு
உலகம் முழுவதும் பரவும் விழிப்புணர்வும் வரவேற்பும்
தற்போது தாயின் கையில் உள்ள டாட்டூவை தொட்டுத் தட்டி சிறுவன் ஹண்டர் எளிதாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறான்.
இந்த யோசனையைப் பாராட்டிப் பள்ளி மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் டாட்டூ கலைஞர்கள் பலரும் ஜெசிகாவைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
பல டாட்டூ கலைஞர்கள் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இலவசமாக இத்தகைய டாட்டூக்களை வரைந்து தர முன்வந்துள்ளனர்.
மகனின் குரலாக மாறத் தனது உடலில் ஆயிரம் காயங்களை ஏற்கவும் தயார் என அந்தத் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.