வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு
வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு தொடர்பாக, வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரூங் மை லானுக்கு, ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2022ல் கைது செய்யப்பட்ட ட்ரூங் மை லான்(67), ரியல் எஸ்டேட் நிறுவனமான வான் தின் பாட்டின் தலைவராக உள்ளார். 12 பில்லியன் டாலர் மதிப்பிலான மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியட்நாமில் நடந்த இந்த மோசடி 2022 வியட்நாம் மொத்த ஜிடிபியில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். 2012 மற்றும் 2022 க்கு இடையில், ஆயிரக்கணக்கான கோஸ்ட் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம், சைகோன் கூட்டு பங்கு வணிக வங்கியை லான் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி இருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தால் சிக்கிய பெரும் தலைவர்கள்
2022 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமடைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் லானின் கைது மிகப்பெரிய ஒரு கைதாகும். இந்த இயக்கத்தின் 'எரியும் உலை' பிரச்சாரம், வியட்நாமிய அரசியல்வாதிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் சிக்கிய வோ வான் துவாங் என்பவர் கடந்த மாதம் பதவி விலகினார். வான் தின் பட், வியட்நாமின் பணக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். சொகுசு குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள், வணிக மையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட திட்டங்களை நடத்தி வருகிறது. வியட்நாம் முதலீட்டாளர்கள் சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளைக் குறைக்க முயற்சிக்கும் ஒரு மாற்று இடமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்த நேரத்தில், இந்த மோசடியின் அளவு ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.