அமெரிக்கா - ஈரான் இடையே உச்சக்கட்ட குழப்பம்! தோஹாவில் நாளை சந்திப்பா? டிரம்ப் ட்வீட்டை மறுத்த ஈரான்
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய இரு தரப்பும் வெளியிட்டுள்ள முரண்பாடான தகவல்கள் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தோஹாவில் இரு நாடுகளுக்கும் இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு முக்கியப் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதனை உடனடியாக மறுத்துள்ளது.
டிரம்ப்
"நாளை தோஹாவில் சந்திப்பு": டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தார் டொனால்ட் டிரம்ப் தனது பதிவில், "ஈரான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கு இடையேயான அந்த சந்திப்பு நாளை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறும்!" என்று குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் இந்த பதிவை உறுதி செய்யும் வகையில், அல் ஜசீரா உள்ளிட்ட முன்னணி சர்வதேச ஊடகங்களும் செவ்வாய்க்கிழமை தோஹாவில் அமெரிக்கா - ஈரான் தொழில்நுட்பக் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்று செய்தி வெளியிட்டிருந்தன.
மறுப்பு
டிரம்பிற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஈரான்
டிரம்பின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். கத்தாரில் இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஈரானின் "தொழில்நுட்பக் குழுக்கள்" எந்தவொரு சந்திப்பையும் நடத்தும் எண்ணத்தில் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கத்தார் நாட்டுடன் ஈரானின் வழக்கமான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தோஹாவில் பணிக்குழுக்களின் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தை நடக்கும் என்ற ஊடகச் செய்திகளை உறுதிப்படுத்த முடியாது என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான தேதியும் இடமும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, அதற்கான சூழல் கனிந்த பிறகுதான் முதற்கட்ட தொழில்நுட்பப் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும், தற்போது இடைத்தரகர் நாடுகள் மூலம் மட்டுமே ஆலோசனைகள் நடப்பதாக ஈரான் கூறியுள்ளது.
பின்னணி
தற்காலிக போர்நிறுத்தமும் பின்னணியும்
கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் மாற்றி மாற்றி நடத்திக் கொண்ட தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம் நிலவியது. அதை தொடர்ந்தே இந்த அவசர பேச்சுவார்த்தைக்கான நகர்வுகள் தொடங்கின. இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் ஆக்ஸியோஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேசக் கப்பல்கள் தற்போதைக்குத் தங்குதடையின்றி சுதந்திரமாகச் சென்று வரலாம் என இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் கத்தார் அரசால் விடுவிக்கப்படும் என்று ஈரானிய அதிபர் திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.