உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு! அமெரிக்கா - ஈரான் இடையே கத்தாரில் நாளை அவசரக் கூட்டம்
செய்தி முன்னோட்டம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கடந்த வாரயிறுதியில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டது. எனினும், சர்வதேச நாடுகளின் கவலையை தொடர்ந்து இரு நாடுகளும் தற்காலிகமாக தங்களின் இராணுவத் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதலுக்கு தீர்வு காண, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நாளை இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அவசரமாகச் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
அவசரக் கூட்டம்
சுவிட்சர்லாந்தில் இருந்து கத்தாருக்கு மாறிய அவசரக் கூட்டம்
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, உண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக வளைகுடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான மோதல் மற்றும் பதற்றம் காரணமாக, கூட்டத்தின் இடமும் அதன் முக்கிய நோக்கமும் தற்பொழுது கத்தாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கத் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் நிக் ஸ்டீவர்ட் நாளை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதல்கள்
வாரயிறுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்கள்
வாரயிறுதியில், ஹார்முஸ் நீரிணையில் சென்ற வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதையடுத்து, ஈரானின் ஏவுகணை, ட்ரோன் மற்றும் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் கடுமையான குண்டுமழை பொழிந்தன. அதிபர் டொனால்ட் டிரம்ப் இத்தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார். வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுத்த ஈரான், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் செயல் ஐநா சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய செயல் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சாடியுள்ளார்.