ஈரானுக்கு எதிரான போர் விரிவடைகிறதா? மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகள், போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு கூடுதல் படைகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் அதிநவீன ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஜோர்டான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதல்களில் 4 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டன் தனது ராணுவத் தயார் நிலையை அங்கு பல மடங்கு உயர்த்தியுள்ளது.
கூடுதல் படை
அமெரிக்காவின் கூடுதல் படைக் குவிப்பு விவரங்கள்
Wall Street Journal வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவின் முக்கிய நடவடிக்கைகளில், அமெரிக்க தளங்களில் இருந்து சிறப்புப் படைகள் மற்றும் எஃப்-16, எஃப்-35 போர் விமானப் படைகள் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள பாம்பர் ரக போர் விமானங்கள் எந்நேரமும் களமிறங்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடையும் வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க ஜெர்மனியில் உள்ள 'லேண்ட்ஸ்டூல்' அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு 150-க்கும் மேற்பட்ட கூடுதல் மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
செலவு
$37 பில்லியனை கடந்த போரின் செலவு
ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தொடர்ச்சியாக 12-வது நாளாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தப் போருக்கான செலவு இதுவரை $37.5 பில்லியனைக் (சுமார் ₹3.1 லட்சம் கோடி) கடந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போர் செலவுகள் அதிகரித்து வருவதால், பென்டகனுக்கு மேலும் $67 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் கடல்வழி அச்சுறுத்தலும்
செங்கடலில் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் செங்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பிராந்தியத்தில் ஏற்கனவே 17 போர்க்கப்பல்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை குவித்துள்ள அமெரிக்கா, தனது படைகளை மேலும் அதிகரிப்பது அதிபருக்கு சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என ஓய்வுபெற்ற ஜெனரல் ஜோசப் வோட்டல் தெரிவித்துள்ளார்.