
ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது.
இந்நிலையில் இன்று(பிப்.,23) ஐ.நா.சபையில் உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இதுவரை நடந்த ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் இந்தியா கலந்துகொள்ளாமல் விலகியே இருந்தது.
அதனையடுத்து தற்போது கொண்டுவரப்படும் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தினை ஆதரிக்க வேண்டும் என்று உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அலுவலகத்தின் தலைவரான ஆன்ட்ரி யர்மாக், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஐநா பொதுசபை
10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல்
ஆன்ட்ரி யர்மாக் பேசியதாவது, ஐநா பொதுசபையில் நடைபெறும் ஓட்டெடுப்பில் உக்ரைனுக்கு தென் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவு தேவை.
இந்தியாவின் ஒத்துழைப்பும் எங்களுக்கு முக்கியம். எங்கள் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.
மேலும், ரஷ்யாவின் நிலப்பகுதியில் ஒரு செ.மீ., கூட தாங்கள் உரிமை கொண்டாடவில்லை.
எங்கள் நிலப்பகுதியை திரும்ப பெறவே நாங்கள் போராடுகிறோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, 10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
போரை முடிவிற்கு கொண்டுவர நியாயமான கேள்விகள் அதில் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு வாய்ப்பினையும் உக்ரைன் வரவேற்கிறது.
உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.