பொதுத்தேர்தல் இன்றி இங்கிலாந்திற்கு புதிய பிரதமர்? கீர் ஸ்டார்மர் இன்று விலக முடிவு
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தலை நடத்தாமலேயே, ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்க வழிவகை ஏற்படும் எனத் தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற மேக்கர்ஃபீல்டு இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு திரும்பியுள்ள ஆண்டி பர்ன்ஹாம், அடுத்த பிரதமர் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார். எனினும், அவர் பிரதமராவதற்கு பல அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகளைக் கடக்க வேண்டியுள்ளது.
பொதுத்தேர்தல்
பொதுத்தேர்தல் ஏன் நடத்தப்பட வேண்டியதில்லை?
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறைமையின்படி, மக்கள் பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை (MPs) மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்பார். அதன் அடிப்படையில் 2024 ஜூலை பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கீர் ஸ்டார்மர் பதவி விலகினாலும் கட்சியின் நாடாளுமன்ற பெரும்பான்மை மாறாது. ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே தனது தலைவரை மாற்றுவது இங்கிலாந்து அரசியலில் புதியதல்ல. 2019-ல் தெரசா மேவுக்கு பிறகு போரிஸ் ஜான்சனும், 2022-ல் லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக்கும் இவ்வாறுதான் பிரதமரானார்கள்.
பர்ன்ஹாம்
போட்டி இன்றி ஆண்டி பர்ன்ஹாம் தலைவராக முடியுமா?
ஆண்டி பர்ன்ஹாம் தொழிலாளர் கட்சியின் எம்பிக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆதரவைப் பெற்று, தனக்கு எதிராக யாரும் போட்டியிடாதவாறு ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படவே விரும்புகிறார். தொழிலாளர் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒரு வேட்பாளருக்கு, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 20% எம்பிக்களின் (அதாவது 81 எம்பிக்கள்) ஆதரவு மற்றும் பரிந்துரை தேவை. வேறு எந்தவொரு வேட்பாளராலும் 81 எம்பிக்களின் ஆதரவைத் திரட்ட முடியாவிட்டால், பர்ன்ஹாம் போட்டியின்றி தலைவராகிவிடுவார். எனினும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தனக்கு 81 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகவும், தான் இப்போட்டியில் களம் காணத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதால் ஒரு உள் கட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
பதவியேற்பு
பர்ன்ஹாம் எவ்வாறு பிரதமராவார்? Handover எப்போது?
தொழிலாளர் கட்சியின் தலைவராக வெற்றி பெற்ற உடனேயே ஒருவர் பிரதமராகிவிட முடியாது. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், கீர் ஸ்டார்மர் இங்கிலாந்து மன்னரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறக்கூடிய தகுதியான நபரை (புதிய தொழிலாளர் கட்சித் தலைவரை) ஆட்சி அமைக்க மன்னர் அழைப்பார். ஆண்டி பர்ன்ஹாம் மன்னரின் அழைப்பை ஏற்று முறைப்படி பிரதமராகப் பதவியேற்று, தனது புதிய அமைச்சரவையை அமைப்பார். கீழ்மட்ட அரசியல் நகர்வுகளின்படி, ஸ்டார்மர் உடனடியாக விலகாமல் வரும் செப்டம்பர் மாதம் வரை பதவியில் நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இது பர்ன்ஹாம் தனது புதிய குழுவை தயார் செய்யவும், செப்டம்பர் இறுதியில் நடக்கும் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கும்.