உக்ரைனில் பிரதமர் மோடி பயணம் செய்யவிருக்கும் ராணுவ ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணத்தை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டிற்கு செல்வதற்கு முன்னர் பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை அவரது நாட்டில் நேரில் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது உக்ரைனுக்கு செல்லும் பிரதமரின் பாதுகாப்பும், பயணமும் எப்படி இருக்கும்? கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடகொரியா அதிபர் ரஷ்யாவிற்கு பயணம் செய்த போது எக்கு ட்ரெயின் ஒன்றில் பயணம் செய்ததாக தெரிவித்திருந்தோம். அதை போலவே ஆடம்பரமும், சொகுசும், பாதுகாப்பும் நிறைந்த ஃபோர்ஸ் ஒன்னில் தான் பிரதமர் மோடி உக்ரைனில் பயணிக்கவுள்ளார். இதன்மூலம், இந்த உயர்ந்த பயணத்தை மேற்கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் அவரும் இணைவார்.
10 மணிநேர பயணம்
பிரதமர் மோடி, 10 மணிநேர பயணம் செய்யவேண்டி உள்ளதால், அவருக்கு தேவையான அனைத்து ஆடம்பரமும் பாதுகாப்பும் இந்த ட்ரைனில் செய்யப்பட்டுள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்பது உக்ரைனின் ரயில்வே நிறுவனமான உக்ர்ஸாலிஸ்னிட்சியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் கமிஷின் என்பவரால் உருவாக்கப்பட்டது. ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, கியேவிற்குள் பறப்பது என்பது சாத்தியமில்லாததால் இந்த ட்ரெயின் பயணம். விமான நிலையங்கள் மூடப்பட்டு, சாலைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால், உக்ரைனுக்குள் மற்றும் வெளியே செல்லும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி ரயிலாகும். இந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயிலில் முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் போன்றவர்கள் பயணித்துள்ளனர்.
ஆடம்பரம்+ பாதுகாப்பை ஒருங்கிணைக்கிறது
ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் இன் உட்புறம் விருந்தினர் மாளிகையை போலவே ஈர்க்கக்கூடியது. எக்சிகியூட்டிவ்-லெவல் ஆபீஸ் மற்றும் ஓய்வெடுப்பதற்குத் தேவையான அனைத்தையும் கொண்ட மரத்தாலான அறைகள், கூட்டங்களுக்கு ஒரு நீண்ட மேஜை, ஓய்வெடுக்க ஒரு சோபா, சுவரில் ஒரு டிவி, மற்றும் வசதியான படுக்கை ஏற்பாடுகள் உள்ளன. போரினால் மின்சார இணைப்புகள் பாதிக்கப்படும் என்பதனால் ட்ரைனின் என்ஜின்கள் டீசல் என்ஜின்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் அனைத்தையும் பார்த்தது: போரின் தொடக்கத்தில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்களை வெளியேற்றுவது முதல் இப்போது இராஜதந்திர உயிர்நாடியாக பணியாற்றுவது வரை. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, இந்தப் பயணம் அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும், உக்ரைனின் நீடித்த மனப்பான்மையின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் இருக்கிறது.