14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்திய ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டான் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சிறுவன் துப்பாக்கிசூடு நடத்துவதற்கு தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தினான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஆறு குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியை ஒருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
செர்பியாவில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.
துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத அங்கிகளை அணிந்த போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுவன் ஆசிரியை சுட்டான். அதன் பிறகு, சீரற்ற முறையில் சரமாரியாக எல்லோரையும் சுடத் தொடங்கினான் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். செர்பியாவில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருப்பதால் அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்