LOADING...
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்
பாகிஸ்தானின் அணு ஆயுதம் குறித்து 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர்

பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 26, 2025
09:09 am

செய்தி முன்னோட்டம்

2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பாகிஸ்தானின் அணு ஆயுதக் குவிப்பு குறித்து புதின் தெரிவித்த கடுமையான எச்சரிக்கைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. "பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல, அது அணு ஆயுதம் ஏந்திய ஒரு ராணுவக் குழு (Junta)" என்று புடின் அப்போது எச்சரித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள்

புடினின் எச்சரிக்கையும் மேற்கத்திய நாடுகளின் போக்கும்

ஜூன் 16, 2001 அன்று ஸ்லோவேனியாவில் நடைபெற்ற இவர்களின் முதல் சந்திப்பின்போது, பாகிஸ்தான் குறித்து புடின் தனது கவலையை நேரடியாகப் பகிர்ந்து கொண்டார். "பாகிஸ்தான் குறித்து நான் கவலைப்படுகிறேன். அங்கு ஜனநாயகம் இல்லை, ஆனால் அணு ஆயுதங்கள் உள்ளன. மேற்கத்திய நாடுகள் ஏன் இதைப் பற்றி விமர்சிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதக் குழுக்களின் கைக்குச் செல்லும் அபாயம் இருப்பதை அவர் அன்றே சுட்டிக்காட்டியிருந்தார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானின் இந்த வளர்ச்சியைப் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியா

இந்தியாவுடன் ஒத்துப்போகும் ரஷ்யாவின் நிலைப்பாடு

வெளியாகியுள்ள இந்த ஆவணங்கள், பாகிஸ்தானின் அணு ஆயுதப் பரவல் குறித்து இந்தியா பல ஆண்டுகளாகத் தெரிவித்து வரும் அதே கவலைகளை புதினும் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன. பர்வேஸ் முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, அணு ஆயுதப் பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 2011ல் ஹிலாரி கிளிண்டன் கூறிய "உங்கள் வீட்டுப் பின்வாசல் பாம்புகள்" என்ற புகழ்பெற்ற உவமைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே, புடின் இது போன்ற எச்சரிக்கைகளை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகம் (National Security Archive) வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பை விளக்கும் முக்கிய வரலாற்றுப் பதிவுகளாகக் கருதப்படுகின்றன.

Advertisement