பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம், இந்தியத் தூதரகம் முற்றுகை
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன. குறிப்பாக, இந்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கியுள்ளதால் அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹாடியின் மரணச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள முன்னணிப் பத்திரிகைகளான 'புரதோம் ஆலோ' மற்றும் 'டெய்லி ஸ்டார்' ஆகியவற்றின் அலுவலகங்களை முற்றுகையிட்டு தீ வைத்தனர். இந்தப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல ஊழியர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கப் போராடினர்.
போராட்டங்கள்
இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள்
ஷரீப் உஸ்மான் ஹாடியை சுட்டு கொன்ற கொலையாளிகள் இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல் போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணை உயர் ஆணையர் இல்லத்தை நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ராஜஷாஹி போன்ற நகரங்களிலும் இந்தியத் தூதரக அலுவலகங்களை நோக்கி பேரணிகள் நடத்தப்பட்டன. கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்ட குழுவினர் முழக்கமிட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியினரே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறி, அக்கட்சியின் அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வன்முறை தேர்தல் சூழலை பெரிதும் பாதித்துள்ளது.
தகவல்கள்
முகமது யூனுஸ் தலைமையிலான அரசின் பதில்
டிசம்பர் 12 ஆம் தேதி டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் சுடப்பட்டதில் இருந்து அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். பின்னர் மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை. ஹாடி இறந்துவிட்டதாக வங்கதேச வெளியுறவு அலுவலகம் முன்னதாக உறுதிப்படுத்தியது. உஸ்மான் ஹாடியின் மறைவையொட்டி டிசம்பர் 20 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். அன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கொலையாளிகள் தப்பியோடிய விவகாரத்தில் வங்கதேச அரசு இந்தியத் தூதரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Scary visuals of Daily Star Newspaper building in Dhaka when it was set afire. Over 30 journalists were stranded in the building. All rescued now by Bangladesh Army. pic.twitter.com/fLxRIliEbX
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 18, 2025