வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை! பிரதமர் மோடி - அதிபர் மிர்சியோயேவ் இடையே தூதுக்குழு அளவிலான முக்கிய பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் அந்த நாட்டு அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் உடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விக்சித் பாரத் 2047 மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் 2030 ஆகிய இரு நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை விரைவாக அடைவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
ஒப்பந்தங்கள்
வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்
முன்னதாக அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பைப் பெற்ற பிரதமர் மோடி, பின்னர் நடைபெற்ற ஆலோசனையில் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டார்.
அண்மைய ஆண்டுகளில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய தொழில் வாய்ப்புகளை இரு நாடுகளும் இணைந்து உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கலாச்சார பிணைப்பு
யோகா மற்றும் கலாச்சார உறவுகளுக்குப் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யோகா அமர்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, யோகா கலை இரு நாட்டு மக்களையும் கலாச்சாரங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப்பில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் பதக்கங்களை வென்றதை நினைவுகூர்ந்த அவர், கலாச்சாரப் பிணைப்புகள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் அழகாக்குகின்றன என்றார்.
தாஷ்கண்டில் நடைபெற்ற கத்தக் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் அவர் நேரில் கண்டு ரசித்தார்.
எஸ்சிஓ மாநாடு
அடுத்த கட்டமாக கிர்கிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாடு
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகருக்குப் புறப்படுகிறார்.
அங்கு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.
மாநாட்டின் போது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய இந்தியாவின் முதன்மைப் பார்வையை முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ள பிரதமர், 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிலும் கலந்து கொள்கிறார்.