தாஷ்கண்டில் யோகா செய்த பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான் பயணத்தில் மிளிர்ந்த கலாச்சார பிணைப்பு
செய்தி முன்னோட்டம்
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா அமர்வில் கலந்துகொண்டார். யோகா பயிற்சி மக்கள் மத்தியிலும் இரு நாடுகளின் கலாச்சாரங்களுக்கு இடையிலும் வலுவான பாலமாக செயல்பட்டு வருவதை பிரதமர் பாராட்டிப் பேசினார். உஸ்பெகிஸ்தான் மக்களிடையே யோகாவிற்கு அதிகரித்து வரும் வரவேற்பையும், இந்திய-உஸ்பெக் மக்கள் உறவின் ஆழத்தையும் இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியினர்
தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலியும் இந்திய வம்சாவளி சந்திப்பும்
தாஷ்கண்ட் சென்றடைந்த பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார்.
தொடர்ந்து யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்கு சென்ற இரு தலைவர்களும், அங்குள்ள சுதந்திர நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தாஷ்கண்டில் தங்கியுள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கத்தக் நடனம் மற்றும் இந்திய-உஸ்பெக் பாரம்பரிய இசை ஒருங்கிணைப்பு கலை நிகழ்ச்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தார்.
இருதரப்புப் பேச்சுவார்த்தை
வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறை குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை
உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது அதிபர் மிர்சியோயேவ் உடன் உயர்மட்டத் தூதுக்குழு பேச்சுவார்த்தையில் பிரதமர் பங்கேற்கிறார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, டிஜிட்டல் இணைப்பு, ஆற்றல் துறை மற்றும் கல்வி ஆகிய முக்கியத் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கவுள்ளனர்.
விக்சித் பாரத் மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் தொலைநோக்கு திட்டங்களை ஒன்றாக முன்னெடுத்து செல்வது இதன் முதன்மை நோக்கமாகும்.
எஸ்சிஓ உச்சி மாநாடு
அடுத்த கட்டமாக கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள எஸ்சிஓ உச்சி மாநாடு
உஸ்பெகிஸ்தான் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகருக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு நடைபெறவுள்ள 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
மாநாட்டின் இடையே கிர்கிஸ் அதிபர் சதிர் ஜபரோவ் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்தவும், 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.