பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் வான்வழித் தாக்குதல்: 29 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த மெகா ஆபரேஷனில், முக்கியத் தளபதி உட்பட 29 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கராச்சியிலுள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தின் மீது துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் புகுந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் மரணமடைந்தனர். இதன்பின் பாதுகாப்பு படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், காயமடைந்த ஒருவன் கைது செய்யப்பட்டான். பிடிபட்டவன் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்பதை ராணுவம் உறுதி செய்தது. இத்தாக்குதலுக்கு ஜமாத்-உல்-அஹ்ரார் பொறுப்பேற்றது.
ராணுவ தாக்குதல்
எல்லையில் பாய்ந்த பாகிஸ்தான் ராணுவம்: 29 பேர் பலி
கராச்சி தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் உத்தரவின் பேரில், ஆப்கான் எல்லைக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜூர் எல்லை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், பாகிஸ்தான் தேடி வந்த மிக முக்கிய பயங்கரவாத தளபதியான கான் ஃபரோஷ் உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்குட்பட்ட பக்டியா, பக்டிகா மற்றும் குனார் ஆகிய மூன்று மாகாணங்களில் இருந்த ஜமாத்-உல்-அஹ்ரார் மற்றும் ஃபித்னா அல்-க்வாரிஜ் (TTP) அமைப்பின் முகாம்கள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 25 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
மோதல்
நீடிக்கும் பாக் - ஆப்கான் தலிபான் மோதல்
பாகிஸ்தானில் சமீபகாலமாக போலீஸார் மற்றும் ராணுவத்தினர் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்களை நடத்தும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஆப்கானிஸ்தானில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஆப்கான் தலிபான் அரசு புகலிடமும் பாதுகாப்பும் அளித்து வருவதாகப் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.