குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான 54 வயது நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட நிக்கில் குப்தா, நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதி சாரா நெட்பர்ன் முன்னிலையில் ஆஜராகி, இந்த சதித் திட்டத்தில் தனக்குள்ள பங்கை ஒப்புக்கொண்டார்.
குற்றச்சாட்டுகள்
நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டுகள்
நிகில் குப்தா மீது மூன்று முக்கிய கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கான தண்டனை விவரங்கள் வருமாறு: கூலிக்குக் கொலை செய்தல்: இதற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கொலை செய்யச் சதித் திட்டம்: இதற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். பண மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்: இந்த மூன்றாவது குற்றச்சாட்டின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக நிக்கில் குப்தாவிற்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கான இறுதித் தீர்ப்பு வரும் மே 29 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
சதித் திட்டம்
1 லட்சம் டாலர் பேரம் மற்றும் சதித் திட்டம்
நீதிமன்ற ஆவணங்களின்படி, பன்னூனைக் கொலை செய்ய விகாஷ் யாதவ் என்பவருடன் இணைந்து நிகில் குப்தா திட்டமிட்டுள்ளார். நியூயார்க்கில் இந்தக் கொலையைச் செய்ய ஒரு கூலிப்படையைத் தொடர்பு கொண்டபோது, அது அமெரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மறைமுக அதிகாரி என்பது தெரியாமல் அவரிடம் பேரம் பேசியுள்ளனர். அட்வான்ஸ் தொகை: கொலையை செய்ய 1 லட்சம் டாலர் தருவதாக ஒப்புக்கொண்டு, அதற்காக 15,000 டாலர் முன்பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மறைமுக அதிகாரி: அந்த அதிகாரி இந்தக் குழுவின் ரகசியப் பேச்சுவார்த்தைகளை ஆதாரங்களுடன் பதிவு செய்ததால், இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
நிலைப்பாடு
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்குத் தொடர்பு இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இது சில தனிநபர்களால் செய்யப்பட்ட தன்னிச்சையான செயல் (Rogue Operation) என்று இந்தியா விவரித்துள்ளது. நிகில் குப்தா அல்லது இந்தச் சதியில் தொடர்புடையதாகக் கூறப்படும் விகாஷ் யாதவ் ஆகியோர் தற்போது இந்திய அரசாங்கத்தின் ஊழியர்கள் அல்ல என்பதையும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவிற்குள் வந்து எங்கள் மக்களைத் தாக்க நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்த வழக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திர உறவுகளில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.