இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா
நேட்டோ தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மேலும் பல பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். "ஜூன் 2022 இல், ராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் மாட்ரிட் உச்சிமாநாடு நடைபெற்றது. அதில் தங்களுக்கு உலகளாவிய அர்ப்பணிப்பு இருப்பதாக நேட்டோ அறிவித்தது. குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை அவர்கள் குறிப்பிட்டனர்" என்று லாவ்ரோவ் புதன்கிழமை மாஸ்கோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும், "இந்திய-சீன உறவுகளில் கூடுதல் சிக்கல்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது." என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:
ஐரோப்பிய அமைப்பான நேட்டோ அந்த கண்டத்தில் வாழும் மக்களுக்கான அமைப்பாக மட்டுமில்லை. அதற்கு உலகளாவிய திட்டங்கள் இருக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளை அவர்கள் அந்த மாநாட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற நாடுகளில் அதிக இயற்கை வளங்கள் இருப்பதால இந்த நாடுகள் பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்துவருகின்றன. இதனால், சர்வேதேச அளவில் புதிய பொருளாதார மையங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதை தடுக்க அவர்கள் முயல்கிறார்கள். புதுவிதமான காலனியாதிக்கத்தை உருவாக்க மேற்கத்திய நாடுகள் முயல்கின்றன. இதை தவிர்க்க ஆசியா, லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா, போன்ற நாடுகளுடன் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, சிஐஎஸ், பிரிக்ஸ், ஈஏஈயு போன்ற அமைப்புகள் இதற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆனால், இதை சீர்குலைக்க நேட்டோ முயல்கிறது.