LOADING...
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்

உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
09:37 am

செய்தி முன்னோட்டம்

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்நாட்டுப் போர் நீடித்து வரும் சூழலில், ராணுவ அரசாங்கத்தின் மேற்பார்வையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல்

ராணுவத்தின் பிடியில் தேர்தல்

கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல், ராணுவ ஆட்சிக்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சி என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆங் சான் சூகியின் 'நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரசி' (NLD) கட்சி 2023 இல் கலைக்கப்பட்டதால், அந்த பெரிய ஜனநாயகக் கட்சி இல்லாமல் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. யாங்கூன் மற்றும் நைபிடாவ் போன்ற முக்கிய நகரங்களில் பலத்த ராணுவப் பாதுகாப்பிற்கு மத்தியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

நம்பகத்தன்மை

தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள்

இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்காததாலும், கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளதாலும் இதன் முடிவுகள் உண்மையான ஜனநாயகத்தைப் பிரதிபலிக்காது என்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி தற்போது 27 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதால் அவரும் இதில் பங்கேற்கவில்லை. எனினும், அண்டை நாடுகளான சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை இந்தத் தேர்தலை மியான்மரின் ஸ்திரத்தன்மைக்கான ஒரு படியாகக் கருத வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

வாக்குப் பதிவு

மூன்று கட்ட வாக்குப்பதிவு

மியான்மரின் ஒட்டுமொத்தமுள்ள 330 நகரங்களில், முதற்கட்டமாக இன்று 102 நகரங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஜனவரி 11 அன்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஜனவரி 25 அன்றும் நடைபெறவுள்ளது. இறுதி முடிவுகள் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தப் பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement