
இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபைக்கு (UNGA) இடையே பேசிய நோபல் பரிசு பெற்ற யூனுஸ், மாணவர்கள் செய்ததை இந்தியா விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், ஆகஸ்ட் 2024 இல் டாக்காவிலிருந்து வெளியேறி, தற்போது புது டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை இந்தியா ஆதரிப்பது, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
கோரிக்கை
இந்தியாவிடம் நாடு கடத்தல் கோரிக்கை
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கோரியுள்ள நிலையில், அதற்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. இராஜதந்திர வேறுபாடுகளைத் தவிர, இந்திய ஊடகங்களில் இருந்து வரும் போலிச் செய்திகள் மற்றும் பிரச்சாரங்கள், இந்தப் போராட்டத்தை இஸ்லாமிய இயக்கமாக சித்தரிப்பதாகவும், இது பதட்டத்தை மேலும் மோசமாக்குவதாகவும் முகமது யூனுஸ் சுட்டிக்காட்டினார். முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து இருதரப்பு உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுபான்மையினர் ஒடுக்குமுறை மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு பங்களாதேஷ் இடமளிப்பதாகக் கூறி இந்தியா கவலை எழுப்பியுள்ள நிலையில், முகமது யூனுஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என்று மறுத்துள்ளார்.