உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் விரைவில் பொதுமக்களிடம் உரையாற்றுவார் எனத்தகவல்
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், ஜனவரி மாதம் நடந்த ஒரு வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் அரச கடமைகளில் பங்கு பெறாமல் இருந்த நிலையில், விரைவில் அரச கடமைகளுக்கு திரும்பி, ஒரு பொது நிகழ்வில் தனது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து பேசுவார் என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் அடுத்த வாரிசாக இருக்கும் கேட் மற்றும் அவரது கணவர் இளவரசர் வில்லியம், பொதுமக்களிடம் தொடர்பு கொள்ளும்போது மிகவும் இயல்பாக பழகுவதால், மக்களிடத்தில் பெரிதும் விரும்பப்பட்ட தம்பதிகளாக திகழ்கின்றனர். எனினும், அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கும் கேட் மிடில்டன் தற்போது தங்கி இருக்கும் இடம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமல் ரகசியமாக காக்கப்பட்டு வருகிறது.
பூமராங் ஆன இளவரசியின் சமீபத்திய புகைப்படம்
இளவரசி கேட் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதில் கூறும் விதமாக கென்சிங்டன் அரண்மனை சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட, அது AI துணை கொண்டு திருத்தம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது கேட் குறித்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. அதன் பின்னர், கேட் சார்பாக வெளியான அறிக்கையில், அவர், இது தான் செய்த ஆர்வக்கோளாறினால் ஏற்பட்ட தவறு என மன்னிப்பு கேட்டிருந்தார். இருப்பினும், கேட்- வில்லியம் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இளவரசி டயானா போலவே, கேட் அரசகுடும்பத்தினரால் வஞ்சிக்கப்படுவதாக அடுத்த வதந்தி கிளம்பியது. இந்த நிலையில் தான் இளவரசி கேட் பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அரச குடும்பத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுமில்லை.