LOADING...
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு இறுதிச்சடங்கு: தந்தை இறுதிச்சடங்கில் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பங்கேற்பாரா?
உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு இறுதிச்சடங்கு நடத்த ஈரான் தற்பொழுது தயாராகி வருகிறது

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு இறுதிச்சடங்கு: தந்தை இறுதிச்சடங்கில் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பங்கேற்பாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2026
08:17 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அவருக்கான பிரம்மாண்ட அரசு இறுதிச்சடங்கு ஊர்வலங்களை நடத்த ஈரான் தற்பொழுது தயாராகி வருகிறது. வரும் ஜூலை 4 முதல் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, பல்வேறு புனித தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 9 அன்று மஷாத் நகரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் தற்பொழுது ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா காமேனி மீது திரும்பியுள்ளது.

பின்னணி

4 மாதங்களாக மறைந்திருக்கும் புதிய தலைவர்: பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரி 28 அன்று மத்திய தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட அதே பயங்கர வான்வழித் தாக்குதலில் 56 வயதான மொஜ்தபா காமேனியும் சிக்கி படுகாயமடைந்தார். இத்தாக்குதலில் அவரது முகம் கடுமையாக சிதைந்துள்ளதாகவும், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய தலைவராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை அவர் ஒருமுறை கூட பொதுவெளியிலோ, வீடியோ மூலமாகவோ அல்லது ஆடியோ பதிவிலோ தோன்றவில்லை. அவரது பெயரில் வெளியாகும் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வருகின்றன.

இறுதிச்சடங்கு

தொடரும் மர்மமும் இறுதிச்சடங்கு முக்கியத்துவமும்

மொஜ்தபா காமேனி உடல்நலத்துடன் இருப்பதாகவும், ஆடியோ லிங்க் மூலம் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தாலும், அவர் நேரில் வராததால் ஈரானின் பல்வேறு நகரங்களில் "தலைவரைக் காணவில்லை" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுப் பரபரப்பு நிலவுகிறது. தீவிர போக்காளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் மறைந்திருக்கிறார் என நியாயப்படுத்துகின்றனர். ஈரானின் பாரம்பரிய முறைப்படி, இத்தகைய மெகா இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாட்டின் புதிய தலைமை தனது பலத்தையும் ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு தளமாகும். தற்பொழுது வான்வழித் தாக்குதலுக்குப் பின் முகம் சிதைந்துள்ளதாகக் கூறப்படும் அவரது மகன் மொஜ்தபா, தனது ரகசிய மறைவிடத்தை விட்டு வெளியே வந்து தந்தைக்காகத் தோன்றுவாரா அல்லது தொடர்ந்து மறைந்திருப்பாரா என்பதே தற்போதைய சர்வதேச கேள்வியாக எழுந்துள்ளது.

Advertisement