ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. லெபனானில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதற்கும், அமெரிக்கா தங்களுக்கு இடையேயான முதற்கட்ட உடன்படிக்கையின் முதல் பிரிவை செயல்படுத்தத் தவறியதற்கும் பதிலடியாக இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான்
ஈரானின் ராணுவத் தலைமையகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) மற்றும் வழக்கமான ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் உயர்மட்ட கூட்டு ராணுவ அமைப்பான கத்தாம் அல்-அன்பியா இந்த மூடல் உத்தரவை விடுத்துள்ளது. ஈரான் அரசு ஊடகமான மெஹ்ர் வழியாக வெளியான இந்த அறிவிப்பில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒப்பந்த மீறல்களுக்கு எதிராக இது ஈரான் எடுக்கும் முதல் கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும், இந்த ஆக்கிரமிப்புகள் நீடித்தால் அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
வான்வழி தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போர் நிறுத்தத்திற்கான ஒரு தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகின்றன. இன்று மட்டும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் அவசர அமைதிப் பேச்சுவார்த்தை
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட போதிலும், இந்த பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. இதற்காகத் தனது உயர்நிலை பிரதிநிதிகள் குழுவை சுவிட்சர்லாந்திற்கு ஈரான் அனுப்பியுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மத்தியஸ்தர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர். அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு நிரந்தர அமைதி உடன்பாட்டை எட்டுவதே இந்த அவசரக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.