ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
ஈரானில் கடந்த 2 மாதங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு போராட்டக்காரர்களில் ஒருவரான மொஷென் ஷெகாரிக்கு(23) என்பவருக்கு சென்ற வியாழக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபர் போராட்டத்தின் போது 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் கிரேன் இயந்திரம் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் போராட்டங்களும் மனித இழப்புகளும்
1979ஆம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின் அந்த நாட்டில் ஆடைக் கட்டுப்பாடுகள் மிக தீவிரமாகக் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியாதற்காக மாஷா அமீனி(22) என்ற இளம்பெண் கைதுசெய்யப்பட்டு காவலில் இருந்த போதே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரான் நாடு முழுவதும் ஹிஜாப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு படையினர் தாக்குதலால் 60 சிறுவர்கள் உட்பட 448 இதுவரை உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையில், ஈரான் அரசு நான்கு நாட்கள் இடைவெளியில் 2 இளைஞர்களைத் தூக்கிலிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.