ஷேக் ஹசீனா ஒப்படைப்பில் காலக்கெடு இல்லை! வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி வெளியிட்ட பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக எவ்விதக் காலக்கெடுவையும் விதிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டாக்காவில் நடைபெற்ற தனியார் அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்ற வங்கதேசத்திற்கான இந்தியத் தூதர் தினேஷ் திரிவேதி இத்தகவலை வெளியிட்டுள்ளார். ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி வங்கதேசம் விடுத்த கோரிக்கை முறையான சட்டப் பூர்வ நடைமுறைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதால், இந்த விவகாரத்தில் யாரும் குறிப்பிட்ட நேரத்தை சொல்ல முடியாது என அவர் விளக்கியுள்ளார்.
இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் ஷேக் ஹசீனாவை அழைத்து வரவில்லை
ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தது குறித்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் இந்தியத் தூதர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்திய விமானப்படையோ அல்லது இந்திய ராணுவமோ அவரை இந்தியாவிற்கு அழைத்து வரவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
2024 ஆகஸ்ட் 5 அன்று ஆட்சிக் கவிழ்ந்தபோது, ஷேக் ஹசீனா இன்னும் பிரதமராகவே நீடித்தார்.
அப்போது நிலவிய அசாதாரண சூழலில் வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான விமானத்திலேயே அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் என்றும், அண்டை நாடு என்ற முறையில் இந்தியா அவருக்கு அடைக்கலம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றம்
வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் தூதரக சிக்கல்களும்
ங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
பின்னர் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசாங்கம் அமைந்தது.
இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஹசீனாவைத் தூதரகக் குறிப்பு மூலம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ஹசீனாவின் இணையவழி செய்தியாளர் சந்திப்பிற்கும் இந்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், அவரது கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் வெளியுறவுத் துறை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
எச்சரிக்கை
வங்கதேச அரசின் கைது எச்சரிக்கை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு
இதனிடையே, வரும் டிசம்பர் மாதத்திற்குள் தான் வங்கதேசம் திரும்பத் தயார் என்றும், சிறை தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ளத் துணிந்துவிட்டதாகவும் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
ஆனால் அவர் மீண்டும் நாட்டிற்குள் நுழையும் பட்சத்தில், அவராக சரணடைய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும், உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப்படும் என்றும் வங்கதேச உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராஜதந்திர விவகாரம் தெற்காசிய அரசியல் சூழலில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.