LOADING...
17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?
தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்

17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 25, 2025
01:12 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார். அவர் அங்கு 17 ஆண்டுகளில் என்ன செய்தார் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தாலும், லண்டனில் இருந்தபடியே ஸ்கைப் மற்றும் Zoom கால்கள் மூலம் வங்கதேச தேசியவாத கட்சியை (BNP) முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கட்சித் தொண்டர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வந்தார். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, தாரிக் ரஹ்மான் மீதான பல வழக்குகள் அரசியல் பழிவாங்கல் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளதால், கட்சியை நேரில் வழிநடத்த இதுவே சரியான தருணம் என நாடு திரும்பியுள்ளார்.

அரசியல் 

ரஹ்மானின் அரசியல் பயணம் ஒரு பார்வை

2008-ல் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட உடல்நல கோளாறுகளுக்காக லண்டனில் நீண்ட கால சிகிச்சை பெற்றார். அதே சமயம், தனது மகளின் கல்வி மற்றும் குடும்ப விவகாரங்களிலும் கவனம் செலுத்தினார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முறையிட்டு, தனது கட்சிக்கு ஆதரவு திரட்டினார். சமூக வலைதளங்களை பயன்படுத்தி வங்கதேச இளைஞர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். "வங்கதேசமே முதன்மையானது" என்ற முழக்கத்தை லண்டனில் இருந்தே முன்னெடுத்தார்.

முக்கியத்துவம்

இந்தியாவுக்கான முக்கியத்துவம்

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்கு பிறகு வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தாரிக் ரஹ்மான், லண்டனில் இருந்தபோது அவர் இந்தியாவுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தீவிரவாத அமைப்பான 'ஜமாத்-இ-இஸ்லாமி' உடன் கூட்டணி வைக்க அவர் மறுத்துள்ளது இந்தியாவுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. பழைய கசப்புகளை மறந்து, ஒரு புதிய உறவைத் தொடங்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது. குறிப்பாக,"டெல்லியும் அல்ல, பிண்டியும் (பாகிஸ்தான்) அல்ல, வங்கதேசமே முதன்மையானது" (Bangladesh First) என்ற கொள்கையை அவர் முன்வைத்துள்ளார். இது அவர் ஒரு சுதந்திரமான மற்றும் சமநிலையான வெளியுறவு கொள்கையை கடைபிடிப்பார் என்பதைக் காட்டுகிறது.

Advertisement