வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள்
காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் மையமாக உள்ளன. மேலும், அவை பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி அவை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உட்பட பெரும் அரசியல்வாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காபோனில் நடக்கும் காடுகள் பற்றிய சர்வதேச உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(FAO) 2022 அறிக்கையின்படி, உலக நிலப்பரப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அல்லது 31 சதவீதத்தை காடுகள் ஆக்கிரமித்துள்ளன. உலகில் சுமார் நான்கு பில்லியன் ஹெக்டேர் (9.9 பில்லியன் ஏக்கர்) பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன.
மீட்டமைக்க முடியாத பெரும் இழப்புகள்
பிரேசில், கனடா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மொத்த காடுகளில் பாதிக்கும் மேலான காடுகளை கொண்டுள்ளன. உலகில் உள்ள காடுகளில் ஏழு சதவீதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. 2015 மற்றும் 2020க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாக FAO கூறுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் சரியாக ஈடுசெய்யப்படவில்லை. பிரேசில், கனடா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 2001 மற்றும் 2021க்கு இடையில் அதிக காடுகளை இழந்துள்ளன. பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. ஏனெனில், அங்கு சுரங்கம், விவசாயம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்திற்காக முதன்மையான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அது மீட்டமைக்க முடியாத பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது.