நாசா நடத்திய உலகளவு ஓவிய போட்டியில் 2ம் இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவி
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2023ம் ஆண்டிற்கான உலக அளவிலான ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தியது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 25,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஓவியப்போட்டியில் இந்திய அளவில் ஒன்பது ஓவியங்கள் தேர்வாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அவற்றுள் 10-12 வயதுக்குட்பட்டவர்களின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி தித்திக்கா வரைந்த ஓவியம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
தேர்வான ஓவியங்கள் ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்படும்
இதனையடுத்து வெற்றிபெற்ற மாணவி தித்திகாவை பள்ளியின் தாளாளர் சாமிநாதன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதனை தொடர்ந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வருங்கால விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நாசா ஏற்பாடு செய்த 'கமர்ஷியல் க்ரூ 2023 கலைப்படைப்பு போட்டி' செப்டம்பர் 2 முதல் அக்டோபர் 27 வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தேர்வான அனைத்து ஓவியங்களையும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய வருட காலங்களில் அச்சிடப்பட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்போட்டி 'ராக்கெட்டுகள் மற்றும் விண்கலம்', 'விண்வெளியில் உயிர் வாழ்வது', 'சூரிய குடும்பத்தை ஆய்வு செய்தல்' போன்றதன் அடிப்படையில் ஓவியங்கள் அமையப்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.