மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து
மெக்சிகோ, ஓஹஸ்கா மாகாணத்தில், பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, சாண்டியாகொ டி யொசண்ட் நகருக்கு புறப்பட்டு சென்றது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, தனது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது. திடீரென நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு மீட்டுப்படையினர் விரைந்து சென்றுள்ளனர். அதே போல் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர்.
படுகாயம் அடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
இதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை செய்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில், 27 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பயணம் மேற்கொண்ட பயணிகளுள் 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப்படையினர் செங்குத்தான மலைப்பகுதியின் அடியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், மீட்கப்பட்ட அனைவரும் தற்போது பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தங்கள் விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.