மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்!
தான் ராணுவத்தில் இருந்த போது ஆப்கானிஸ்தானில் 25 பேரைக் கொன்றதாக இளவரசர் ஹாரி, "ஸ்பேர்" என்னும் புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும், அவர்களை வீழ்த்துவது "செஸ் காய்களை வீழ்த்துவது" போல் இருந்ததாகவும் அவர் அந்த புத்தகத்தில் கூறி இருக்கிறார். இதை தாலிபான் தலைவர்கள் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர். தாலிபான் தளபதியின் விமர்சனம்: "ஹாரி ஒரு தோல்வியுற்றவர், ஒண்டிக்கொண்டி மோத பயப்படுகிறார். அவரையும் அவரது இராணுவத்தையும் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றி வரலாறு படைத்தோம், அதற்காக அவர் மிகவும் கோபப்பட வேண்டும்." "எங்கள் முஜாஹிதீன் தியாகிகள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவரது படையெடுப்பு நண்பர்கள் நரகத்தில் எரிகிறார்கள். அவர் இருந்தபோது நான் ஹெல்மண்டில் இருந்திருந்தால், உண்மையான செஸ் காய்கள் என்றால் என்ன என்பதை அவருக்குப் புரிய வைத்திருப்பேன்."
"நீங்கள் கொன்றது சதுரங்க காய்களை அல்ல, மனிதர்களை": தாலிபான்
"மிஸ்டர் ஹாரி! நீங்கள் கொன்றது சதுரங்க காய்களை அல்ல, அவர்கள் மனிதர்கள்" என்று தாலிபானை சேர்ந்த ஹக்கானி ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார். "நீங்கள் சொன்னது உண்மைதான்; எங்கள் அப்பாவி மக்கள் உங்கள் வீரர்கள், இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு சதுரங்கக் காய்களாக இருந்தனர். ஆனாலும், அந்த 'விளையாட்டில்' நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள்," என்று அவர் மேலும் கூறி இருக்கிறார். தாலிபான் உறுப்பினர்களை மக்களாகப் பார்க்க வேண்டாம் என்று இராணுவம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக ஹாரி கூறி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. "எனவே எனது எண் 25. இது எனக்கு திருப்தியை அளிக்கும் எண் அல்ல, ஆனால் அது என்னை சங்கடப்படுத்தவும் இல்லை" என்று இளவரசர் ஹாரி அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.