பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICT) தனது தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 17) வழங்கவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த போராட்டங்கள் மற்றும் வன்முறையின்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா எதிர்கொள்கிறார். மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். ICT-BD தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம், "அவர் 1,400 மரண தண்டனைகளுக்குத் தகுதியானவர். அது மனிதகுலத்தால் சாத்தியமில்லாததால், ஒரு மரண தண்டனையையாவது நாங்கள் கோருகிறோம்." என்று தெரிவித்தார்.
பலி
ஐநா அறிக்கையின்படி 1,400 பேர் பலி
ஓய்வு பெற்ற உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் மற்றும் அப்போதைய காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மமுன் ஆகியோரும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர். ஷேக் ஹசீனாவும், கமலும் தலைமறைவாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் நேரடியாக பங்கேற்காமல் விசாரணை நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நடந்த வன்முறையில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம். ஷேக் ஹசீனா மற்றும் இருவர் மீதும் மொத்தம் ஐந்து பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் கொலை, கொலை முயற்சி, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு உத்தரவிட்டது ஆகியவை அடங்கும். ஷேக் ஹசீனா நிரந்தரமாக அதிகாரத்தில் நீடிக்கவே வன்முறையை ஏவியதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.