தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கலால் உச்சகட்ட பதற்றத்தில் பங்களாதேஷ்
செய்தி முன்னோட்டம்
டாக்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்பு தாக்குதல்களை தொடர்ந்து வங்கதேசம் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிர்வாக தலைவர் முகமது யூனுஸுடன் தொடர்புடைய கிராமீன் வங்கி தலைமையகம் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் இதில் அடங்கும். வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாகவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வியாழக்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த வன்முறை நடந்துள்ளது.
தாக்குதல் விவரங்கள்
டாக்காவில் தொடர் தாக்குதல்கள்
டாக்காவில் திங்கள்கிழமை அதிகாலையில் ஒரு அரசுக்கு சொந்தமான பேருந்து எரிக்கப்பட்டதன் மூலம் வன்முறை தொடங்கியது. நதுன் பஜார் பகுதிக்கு அருகில் ஒரு தனியார் காரும் தீக்கிரையாக்கப்பட்டது. மிர்பூரில் உள்ள கிராமீன் வங்கி தலைமையகத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ஒரு கச்சா குண்டை வீசி தப்பி செல்வதை நேரில் பார்த்தவர்கள் கண்டனர். மற்றொரு தாக்குதல் மீன்வளம் மற்றும் கால்நடை ஆலோசகர் ஃபரிதா அக்தரின் வணிக நிறுவனத்தை குறிவைத்து இதேபோன்ற வெடிகுண்டுகளை பயன்படுத்தி நடந்துள்ளது.
வன்முறை
நகரின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவுகிறது
வன்முறை விரைவில் டாக்காவின் பிற பகுதிகளுக்கும் பரவியது, இப்னு சினா மருத்துவமனை மற்றும் மிடாஸ் மையம் அருகே நான்கு கச்சா குண்டுகள் வீசப்பட்டன. மௌச்சக் சந்திப்பு, அகர்கானில் உள்ள பங்களாதேஷ் பெட்டார், கில்கான் மேம்பாலம் மற்றும் ஷா அலி சந்தைக்கு அருகிலும் வெடிச்சத்தங்கள் கேட்டன. தேசிய குடிமக்கள் கட்சி அலுவலகம் மீது கச்சா குண்டு வீசப்பட்டது, அதில் ஒருவர் காயமடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பதில்
அரசு கட்டிடங்களுக்கு அருகில் பொதுக்கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, டாக்கா பெருநகர காவல்துறை முக்கிய அரசு மற்றும் நீதித்துறை கட்டிடங்களுக்கு அருகில் பொதுக் கூட்டங்களை தடை செய்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய சட்ட அமலாக்க முகமைகள் நகரம் முழுவதும் சோதனைகளை நடத்தி வருகின்றன. தடைசெய்யப்பட்ட அவாமி லீக் மற்றும் சத்ரா லீக்கின் ஆர்வலர்களால் நவம்பர் 13 அன்று திட்டமிடப்பட்ட "டாக்கா லாக்டவுன்" நிகழ்ச்சிக்கு முன்னதாக 30க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்.