LOADING...
வங்கதேச அரசியல் தலைவர் சுடப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்: போதை விருந்து.. மர்மப் பெண்.. சிக்கிய ரகசியங்கள்!
தொடர்ந்து நடைபெறும் அரசியல் கொலைகள் காரணம் கட்டி பங்களாதேஷின் வன்முறை வெடித்துள்ளது

வங்கதேச அரசியல் தலைவர் சுடப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்: போதை விருந்து.. மர்மப் பெண்.. சிக்கிய ரகசியங்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2025
05:33 pm

செய்தி முன்னோட்டம்

உள்நாட்டு ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, வங்கதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் மொதலேப் ஷிக்தர் சுடப்பட்ட வழக்கில், போதைப்பொருள் மற்றும் மர்ம பெண் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. NCP கட்சியின் தொழிலாளர் பிரிவு தலைவரான மொதலேப் ஷிக்தர், கடந்த திங்கள்கிழமை குல்னா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். அவரது காதுக்கு அருகே துப்பாக்கி தோட்டா பாய்ந்திருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பியுள்ளார்.

சோதனை

போலீஸ் சோதனையில் சிக்கிய போதைப்பொருட்கள்

துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் பல அதிர வைக்கும் உண்மைகள் அம்பலமாகின. சம்பவ இடத்தில் ஆறு மதுபான பாட்டில்கள் மற்றும் யாபா' (Yaba) எனப்படும் வீரியமிக்க போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடப்பதற்கு முந்தைய இரவு, அந்த வீட்டில் மிகப்பெரிய மது மற்றும் போதைப்பொருள் விருந்து நடந்திருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்த வீட்டை தன்வி என்ற பெண் கடந்த நவம்பர் மாதம் முதல் வாடகைக்கு எடுத்துள்ளார். தன்னை ஒரு NGO ஊழியர் என்று கூறிக்கொண்ட அந்த பெண், ஷிக்தருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, வீட்டைப் பூட்டிவிட்டு தன்வி தலைமறைவாகியுள்ளார். போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிசிடிவி

திருப்பம் தந்த சிசிடிவி (CCTV) காட்சிகள்

ஆரம்பத்தில், தான் தெருவில் நடந்து சென்றபோது யாரோ சுட்டதாக சிக்தர் போலீஸாரிடம் பொய் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் அந்த வீட்டிற்குள் இருந்தே காயத்துடன் வெளியே வருவது உறுதியானது. பணத் தகராறு அல்லது 'மாமூல்' பிரிப்பதில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வரும் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தகைய குற்றச்சம்பவங்கள் இடைக்கால அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.

Advertisement