ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் வெள்ளிக்கிழமை(செப் 29) தடுக்கப்பட்டார். பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் ஒரு இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரை ஸ்காட்லாந்து குருத்வாராவிற்கு வெளியே தடுத்து நிறுத்திய ஒரு தீவிர பிரிட்டிஷ் சீக்கிய ஆர்வலர்கள் குழு, அவர் அங்கு "வரவேற்கப்படவில்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவின் குருத்வாரா கமிட்டியுடன் விக்ரம் துரைசாமி ஒரு சந்திப்பைத் திட்டமிட்டிருந்தாகவும், அது சில தீவிர சீக்கிய ஆர்வலர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீக்கியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே விரிசல்
இதனால், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்த சில காலிஸ்தான் சார்பு தீவிர சீக்கியர்கள், "இங்கிலாந்தில் உள்ள எந்த குருத்வாராவிலும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளனர். "இங்கிலாந்து-இந்தியா கூட்டணியால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதிலிருந்து சமீபத்திய பதட்டங்களால் பிரிட்டிஷ் சீக்கியர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்." என்று சம்பவ இடத்தில் இருந்த ஒரு தீவிர சீக்கியர் கூறியுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதியும் கனட குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், சீக்கியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயான பதட்டங்களும் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன.