செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்
செர்பியாவில் 21 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். செர்பியாவின் தேசிய தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிலாடெனோவாக் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி மக்கள் மீது சந்தேக நபர் கண்மூடித்தனமாக சுட்டதாக கூறப்படுகிறது. தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில், செர்பியாவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
இரண்டு நாட்களுக்கு முன் 13 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிசூடு
கடந்த புதன்கிழமை, 13 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பள்ளி காவலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோஸ்டா கெக்மனோவிச், தாக்குதலுக்குப் பிறகு தானே முன்வந்து காவல்துறையில் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது. 1990களில் நடந்த போர்களின் விளைவாக செர்பியாவில் ஆயுதங்கள் வைத்திருப்பது சாதாரண விஷயம் என்றாலும், பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கிசூடு நடந்தது. அப்போது போர் வீரர் ஒருவர் 13 பேரை கொன்றார்.