ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் காயம்!
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் பலியாகினர் என்றும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ஆரம்பத்தில் 6.2 ஆக மதிப்பிடப்பட்டாலும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதை 6.3 ரிக்டர் என உறுதிப்படுத்தியது. இந்த நிலநடுக்கம், சுமார் 5.23 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப் (Mazar-e Sharif) அருகே 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் 'உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் பேரழிவு பரவலாக இருக்கலாம்' என்று குறிக்கும் வகையில், USGS தனது PAGER அமைப்பில் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள் மற்றும் பின்னணி
மசார்-இ-ஷெரீஃப் நகரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் பின்னர் பகிரப்படும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் நிலநடுக்க அதிர்வுகள் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 2,200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்தச் சமீபத்திய நிலநடுக்கம் மீண்டும் அப்பகுதி மக்களைப் பீதியடைய வைத்துள்ளது. ந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் பல பிளவு கோடுகளில் (Fault Lines) ஆப்கானிஸ்தான் அமைந்திருப்பதால், அந்நாடு அடிக்கடி நிலநடுக்க அபாயத்தை எதிர்கொள்கிறது.