முத்தரப்பு டி20 தொடர் : இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் உள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்ற டி20 முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக, இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் தியோல் 46 ரன்கள் எடுத்தார். மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கை இந்திய வீராங்கனைகளின் தரமான பந்துவீச்சு கட்டுக்குள் வைத்தது. ஆனால் க்ளோ ட்ரையோன் உறுதியாக நின்று அரை சதம் அடித்ததோடு, தனது அணிக்கு வெற்றியையும் பெற்றுத் தந்தார். இதற்காக ஆட்ட நாயகி விருதையும் வென்றார்.
தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மா
இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றாலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தொடர் நாயகி விருதை கைப்பற்றியுள்ளார். ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா, முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனையாக உள்ளார். தீப்தி மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதே சமயம் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்த நிலையில், அதிலும் திறமையாக ஆடி 49 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல், தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில், இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 109 என்ற அதிகபட்ச சராசரியுடன் 109 ரன்கள் குவித்துள்ளார்.