மகளிர் ஐபிஎல் 2023 : பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு!
மகளிர் பிரீமியர் லீக்கின் (மகளிர் ஐபிஎல்) முதல் சீசனுக்கான ஏல தேதி பிப்ரவரி 13 இல் மும்பையில் நடக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மையம் நகரின் மத்திய வணிக மாவட்டத்தின் கலாச்சார மையத்தில் அமைந்துள்ளது. சமீபகாலமாக பிசிசிஐ ஏலத்தை நடத்துவதற்கு ஹோட்டல்களை தேடி வந்ததாகவும், திருமண சீசன் காரணமாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மும்பையில் ஏலத்தை நடத்துவதற்கான இடத்தை பிசிசிஐ இறுதி செய்துள்ளது.
ஏலத்திற்கு 1000 வீராங்கனைகள் முன்பதிவு
சுமார் 1,000 கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு நடக்கும் முதல் சீசனில் ஐந்து அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்பதால் 100 முதல் 120 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஏலத்தில் ஒரு வீரரை வாங்குவதற்கு ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி பர்ஸ் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் பர்ஸில் ரூ.1.5 கோடி அதிகரிக்கும். ஆடவருக்கான ஐபிஎல்லுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகவும் குறைவு. ஆண்களுக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு 95 கோடி ரூபாய் பர்ஸ் உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.6 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடியும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 கோடியும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.