யார் இந்த டி.டி.வி. நம்பூரி, எஸ். விஸ்வநாத்? ஆசிய போட்டியில் இந்திய வீரர்களின் பெயர்கள் மாறியதன் பின்னணி
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 211 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியை 192 ரன்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றியின் போது, மைதானத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ 'மேட்ச் கார்டு' பட்டியலில் இடம் பெற்றிருந்த சில இந்திய வீரர்களின் விநோதமான பெயர்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.
பெயர் மாற்றம்
பாஸ்போர்ட் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்கள்
இந்தக் குழப்பத்திற்கு முக்கியக் காரணம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நெறிமுறைகளின்படி வீரர்களின் பெயர் விவரங்கள் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ளவாறே அதிகாரப்பூர்வப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டதுதான்.
அதன்படி, முன்னணி பேட்டர் திலக் வர்மா டி.டி.வி. நம்பூரி (நம்பூரி தாக்கூர் திலக் வர்மா) என்றும், சஞ்சு சாம்சன் எஸ். விஸ்வநாத் (சஞ்சு விஸ்வநாத் சாம்சன்) என்றும், தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 'மணி சங்கர்' (மணி சுந்தர் வாஷிங்டன் சுந்தர்) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ஐயர் ஸ்ரேயாஸ் சந்தோஷ் எனவும், சிவம் துபே துபே சிவம் ராஜேஷ் எனவும், ஜஸ்பிரித் பும்ரா பும்ரா ஜஸ்பிரித் ஜஸ்பீர்சிங் எனவும் முழு பாஸ்போர்ட் பெயர்களுடன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
அதிரடி காட்டிய திலக் வர்மா
இந்தியாவின் பதக்க நிலவரம்
இப்போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.
நடுவரிசையில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ரன் சேர்க்கத் திணறிய வேளையில், 'டி.டி.வி. நம்பூரி' என்ற பெயருடன் களமிறங்கிய திலக் வர்மா 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 200 கடக்க உதவினார்.
சிவம் துபேயும் அதிரடி காட்டினார். இப்போட்டியில் வென்ற தங்கம், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த 19-வது தங்கப் பதக்கமாகும்.
இதன் மூலம் 19 தங்கம், 26 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது.