வாஷிங்டன் சுந்தரின் முதல் டி20 அரைசதம் வீணானது!
ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நேற்று (ஜனவரி 27) நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியாவை 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களில் கட்டுப்படுத்தி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்களில் தத்தளித்த நிலையில், சூர்யகுமார் (47), பாண்டியா (21) ஜோடி அணியை மீட்டெடுத்தனர். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் போராடி 50 ரன்கள் எடுத்து இந்தியா இலக்கை எட்ட முயற்சி செய்தார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இருந்தாலும் இது டி20யில் அவரது முதல் அரை சதமாகும்.
வாஷிங்டன் சுந்தரின் அசத்தல் ஆல்-ரவுண்டர் செயல்திறன்
இந்தியா 83/4 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் இந்தியாவின் தனி வீரராக மாறினார். மறுமுனையில் பார்ட்னர்களை இழந்தாலும் அவர் எதிர் தாக்குதலை தொடர்ந்ததால் தான் இந்தியா அவமானகரமான தோல்வியிலிருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு, 4 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20யில் ஒரே போட்டியில் 50 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது இந்தியர் என்ற பெருமையை சுந்தர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.