முட்டாள்தனமான அறிக்கை வெளியிடும் ஹர்திக் பாண்டியா; விளாசிய வெங்கடேஷ் பிரசாத்
செய்தி முன்னோட்டம்
இந்தியா தனது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை தோல்வியுடன் முடித்ததன் மூலம், 2021க்குப் பிறகு முதல்முறையாக டி20 இருதரப்பு தொடரில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 12 தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது.
போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஒரு தொடரில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், தாங்கள் இதில் நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது சில காலமாக மிகவும் சாதாரண அணி போல் தோற்றமளிக்கிறது என்றும், அணி தன்னை தீவிர சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
venkatesh prasad slams hardik pandya for loss
தோனியை ஒப்பிட்டு பாண்டியாவை விளாசிய வெங்கடேஷ் பிரசாத்
தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வரும் வெங்கடேஷ் பிரசாத், "சில மாதங்களுக்கு முன்பு டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறத் தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் சுயபரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இங்கேயும் அங்கேயுமாக சில தொடர்களை இழப்பது கவலையில்லை என்றும், நீண்டகால செயல்பாட்டில் கவனம் செலுத்துவதாக ஹர்திக் பாண்டியா கூறியதை விமர்சிக்கும் வகையில் வெங்கடேஷ் இதை கூறியுள்ளார்.
அவர் மேலும், "நீண்டகால செயல்பாடு" என்பதை எம்எஸ் தோனி மட்டுமே உண்மையாக செய்ததாகவும், இப்போது வெறும் வாய் வார்த்தையாகவே அது வீரர்களால் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.