Loading...
52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை
அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி

52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2026
07:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற 2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில், இந்திய ஏ அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி வெறும் 52 பந்துகளில் 200 ரன்களைக் கடந்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 15 வயது மற்றும் 242 நாட்களே ஆன நிலையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

சாதனை

28 சிக்ஸர்களுடன் டார்சி ஷார்ட்டின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி

தோஹா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயித்த 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய ஏ அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, ஜாஹித் அலி வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி தனது அதிரடியைத் தொடங்கினார்.

தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளையும், நம்ப முடியாத வகையில் 28 சிக்ஸர்களையும் அவர் பறக்கவிட்டார்.

இதன் மூலம், ஒரு லிஸ்ட் ஏ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்ட்டின் (23 சிக்ஸர்கள்) முந்தைய சாதனையை சூர்யவன்ஷி தகர்த்தெறிந்துள்ளார்.

சாதனைகள்

16 பந்துகளில் அரைசதம், 28 பந்துகளில் சதம் எனப் பறந்த சாதனைகள்

இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரிலேயே வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த சூர்யவன்ஷி, மறுமுனையில் நின்ற தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை வெறும் பார்வையாளராகவே மாற்றினார்.

நான்காவது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த அபிஷேக் சர்மா, 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும், சூர்யவன்ஷியின் வேகம் துளியும் குறையவில்லை. தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த அவர், வெறும் 28 பந்துகளில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் அதிவேக சதத்தைப் பதிவு செய்தார்.

ADVERTISEMENT

வரலாற்றுத் தருணம்

103 பந்துகள் சாதனையை 52 பந்துகளில் தகர்த்த வரலாற்றுத் தருணம்

சதம் கடந்த பிறகும் பந்துவீச்சாளர்களுக்குச் சற்றும் ஓய்வு கொடுக்காத வைபவ் சூர்யவன்ஷி, இந்திய இன்னிங்ஸின் 10-வது ஓவரின் கடைசிப் பந்தில் 40 பந்துகளில் தனது 150 ரன்களை எட்டினார்.

அடுத்த 50 ரன்களை வெறும் 12 பந்துகளில் எட்டிய அவர், 52-வது பந்தில் இரட்டை சதத்தை நிறைவு செய்து வரலாறு படைத்தார்.

இதன் மூலம், 2024-ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸ் 103 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்த முந்தைய உலக சாதனையைப் பாதிக்கும் குறைவான பந்துகளில் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த இன்னிங்ஸ் 13-வது ஓவரில் முடிவுக்கு வந்தது.

லாங்-ஆஃப் திசையில் மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்றபோது, கேட்ச் கொடுத்து 203 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT