
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : உஸ்மான் கவாஜாவுக்கு விசா கிடைக்காததால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல்!
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவர்களின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழா முடிந்ததும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்கு புறப்பட்டது.
ஆனால் உஸ்மான் கவாஜா விசா பிரச்சினைகளால் அணி வீரர்களுடன் இந்தியா கிளம்பவில்லை. மற்ற குழுவினர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், கவாஜா தனது இந்திய விசா அனுமதிக்காக இன்னும் காத்திருக்கிறார்.
இதன் விளைவாக, அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணியில், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், கேமரூன் கிரீன் விளையாடுவதும் சந்தேகமாக உள்ள நிலையில், கவாஜாவும் கிளம்பாததால், ஆஸ்திரேலிய அணி தள்ளாட்டத்தில் உள்ளது.
உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜாவின் முக்கியத்துவம்
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கவாஜா அணியில் மிக முக்கியமான உறுப்பினர் ஆவார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கவாஜா, இதுவரை மொத்தம் 56 போட்டிகளில் விளையாடி 46.21 சராசரியில் 4,021 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் 12 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 174 ஆகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளில் ஆண்டின் சிறந்த ஆண்கள் டெஸ்ட் வீரருக்கான ஷேன் வார்னே விருதை அவர் வென்றார்.
கடந்த ஆண்டு மறைந்த புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரின் நினைவாக இந்த விருது தற்போது முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.