LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கத்துக்குட்டி அமெரிக்கா
டி20 உலகக்கோப்பை 2026 குரூப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கத்துக்குட்டி அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 14, 2026
07:50 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் ஏ பிரிவில், வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய அமெரிக்கா, நெதர்லாந்து அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமெரிக்கா, அனைத்துத் துறைகளிலும் அதிரடி காட்டி வெற்றியை தன்வசமாக்கியது.

பேட்டிங்

மலைக்க வைத்த பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க கிரிக்கெட் அணி, தனது டி20 வரலாற்றில் நெதர்லாந்திற்கு எதிராக அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது. 21 வயதேயான இளம் வீரர் சாய் தேஜா முக்கமல்லா 51 பந்துகளில் 79 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கேப்டன் மோனாங்க் படேல் ஆரம்பத்தில் தடுமாறினாலும், இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். ஷுப்மன் ரஞ்சனே ஆட்டத்தின் இறுதியில் அதிரடி காட்டிய இவர் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து ஸ்கோரை 200க்கு அருகில் கொண்டு சென்றார்.

நெதர்லாந்து

நெதர்லாந்தை சுருட்டிய பந்துவீச்சு

197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி, அமெரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 103 ரன்களுக்குச் சுருண்டது. அமெரிக்காவின் ஹர்மீத் சிங் தனது சுழற்பந்து வீச்சால் நெதர்லாந்தை நிலைகுலையச் செய்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஷாட்லி வான் ஷால்க்விக், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நெதர்லாந்து வீரர்கள் மாக்ஸ் ஓ'டவுட் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் சிறிது நேரம் போராடினாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 15.5 ஓவர்களிலேயே அந்த அணி ஆட்டமிழந்தது.

Advertisement

சூப்பர் 8

சூப்பர் 8 வாய்ப்பு மற்றும் அடுத்த கட்டம்

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், அமெரிக்கா இந்தப் புத்துணர்ச்சியுடன் அடுத்த ஆட்டத்தை எதிர்கொள்ளும். நெதர்லாந்து பிப்ரவரி 18 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள வாழ்வா சாவா போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Advertisement