டி20 உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்படுவது குறித்து ஷுப்மன் கில்லுக்கே தெரியாதா?
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. TimesNow வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஷுப்மன் கில் நீக்கப்பட உள்ளார் என்ற செய்தி அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான சண்டிகருக்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான், அவருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. அணி அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் பிசிசிஐ தரப்பில் இருந்து அவருக்கு அழைப்பு சென்றதாகவும், அதுவரை அவர் உலகக்கோப்பை தொடருக்குத் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
காரணங்கள்
நீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்
அஜித் அகர்கர் கூறுகையில், ஷுப்மன் கில் நீக்கப்பட்டது அவரது பேட்டிங் ஃபார்ம் குறைபாட்டினால் அல்ல, மாறாக அணியின் 'காம்பினேஷன்' (Combination) காரணத்தினாலேயே என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்று விரும்பியது. இதனால் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், விளையாட்டு வட்டாரங்கள் மற்றும் பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் டி20 போட்டிகளில் கில்லின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 15 இன்னிங்ஸ்களில் வெறும் 291 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிரடி ரன் குவிப்பில் அவர் சற்று பின்தங்கியதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.