
ஆசிய கோப்பை ஊதியத்தை இந்திய ராணுவ வீரர்களுக்கும் பஹல்காம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழகுவதாக சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பைத் தொடரில் தான் விளையாடிய போட்டிகளுக்கான மொத்த ஊதியத்தையும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நாட்டின் எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவத்தின் தன்னலமற்ற சேவைக்கு செலுத்தும் நன்றியாகவும், மேலும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குடும்பங்களின் துயரத்தைப் போக்குவதே இந்தச் சிறிய நன்கொடையின் நோக்கம்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு
பிசிசிஐ பாராட்டு
சூர்யகுமார் யாதவின் இந்த முடிவு, அணி வீரர்களிடையே மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாக இது கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மற்றும் பிற கிரிக்கெட் தலைவர்களும் அவரது இந்தச் செயலைப் பாராட்டியுள்ளனர். இந்தப் பணம், இந்திய ராணுவத்தின் வீரர்களுக்கான நலத்திட்டங்களுக்கும், பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சூர்யகுமார் யாதவ் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடந்த விளம்பரப் போட்டோஷூட்டில் கலந்துகொள்ள மறுத்ததன் மூலம் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.