தோனியை பின்னுக்குத் தள்ளிய சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்டில் புது சாதனை!
இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை தற்போது சூர்யகுமார் யாதவ் பின்னுக்குத் தள்ளியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், நேற்று (ஜனவரி 27) சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லை எட்டினார். மேலும், இந்தப் போட்டியில் 40 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். நேற்றைய போட்டியில், இந்தியா ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகு, சூர்யகுமார் யாதவுடன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணியை மீட்க போராடிய பாண்டியா இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த டாப் 10 இந்தியர்களின் பட்டியல்
பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். கோலி இதுவரை 107 இன்னிங்ஸ்களில் 4,008 ரன்களை குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 140 இன்னிங்ஸ்களில் 3,853 ரன்கள் குவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள கே.எல்.ராகுல், 68 இன்னிங்ஸ்களில் 2,265 ரன்கள் எடுத்துள்ளார். நான்காவது இடத்தில் ஷிகர் தவான் உள்ளார். இவர் 66 இன்னிங்ஸ்களில் 1759 ரன்கள் எடுத்துள்ளார். தோனி மற்றும் ரெய்னாவை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ள சூர்யகுமார், 44 இன்னிங்ஸ்களில் 1,625 ரன்கள் எடுத்துள்ளார். தோனி ஆறாவது இடத்திலும், ரெய்னா ஏழாவது இடத்திலும், பாண்டியா எட்டாவது இடத்திலும், யுவராஜ் சிங் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முறையே 9 மற்றும் 10வது இடத்திலும் உள்ளனர்.