
சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 14 அன்று துபாயில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பின், அவர் தெரிவித்த கருத்துகள் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படுகிறது. போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பாராட்டியும் கருத்துகளைத் தெரிவித்தார்.
அரசியல் கருத்துக்கள்
கிரிக்கெட் காலத்திற்கு வெளியே அரசியல் கருத்துக்கள்
இந்தப் பேச்சு, கிரிக்கெட் களத்திற்கு வெளியே அரசியல் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவின் இந்தக் கருத்துகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. புகாரை மறுபரிசீலனை செய்த ஐசிசி, இந்திய வீரருடன் நடத்திய உரையாடலுக்குப் பிறகு, நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதித்தது. போட்டி முடிந்து சில தினங்களில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீரர்கள் மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் பொதுவில் பேசும்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.